ஏகன் தோல்விக்கு பின்னர் அஜீத் மற்றும் அவரின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம் அசல். இப்படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இரண்டு வேடங்கள் வைக்கப்பட்டதன் காரணம் இதற்கு முன் அவர் இரட்டை வேடமிட்டப் படங்கள் வெற்றி பெற்றதுதான். மற்றபடி இரண்டு வேடங்களில் எந்த ஒரு சிறப்பும் இல்லை.
அப்பா அஜீத் (அதே மீசை கிறுதாவில் வெள்ளை மை பூசி அப்பாவாக்கியிருக்கிறார்கள்) தன் மனைவிக்குப் பிறந்த இரண்டு மகன்களை விட தன் சிறு வயதில் செய்த தவறுக்கு பிறந்த மகன் மீது அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் வைத்து அனைத்து சொத்துகளையும் அவர் மீதே எழுதி வைக்கிறார்.
படம் ப்ரான்ஸில் தொடங்குகிறது. அஜீத்தை ஸ்டைலாக காட்டுவதற்காகத்தான் வெளிநாட்டு படப்பிடிப்பு என தோன்றுகிறது. மற்றபடி கதைக்கு தேவையில்லை. அந்த அப்பா அஜீத் எழுதி வைத்த உயிலில் ஓட்டையை கண்டறிந்து தம்பிகள் இருவரும் அஜீத்தை சுட்டு விடுகிறார்கள். பின்னர் வழக்கமான ஹீரோ போல் அவர் பிழைத்து வந்து தம்பிகளை பழிவாங்கத் தொடங்குகிறார். இதில் வெற்றி பெற்றாரா? என்பதுதான் படத்தின் கதை.
படம் முழுக்க அஜீத்தை தவிற வேறு யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை (நடிப்புக்கு கூடத்தான்). அஜீத் அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்தாலும் படம் முழுக்க "தல" புராணம். அஜீத் ரசிகர்களுக்கே சில இடங்களில் அந்த புராணம் அதிகப்படி எனத் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய (ஏன் முழுமைன்னும் சொல்லலாம்) ப்ளஸ் அஜீத் மட்டுமே.
நல்ல ஒரு ஸ்டைல், வாயில் சிகரெட் வைத்திருப்பதும் சரி, சண்டைக் காட்சிகளிலும் சரி அவரது ஸ்டைல் அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. படத்தில் அஜீத்துக்கு வசனங்கள் குறைவு. தன் உடல் அசைவுகளால் தன் நடிப்பைநிரூபிக்க வேண்டிய கட்டாயம். அதை செவ்வனே செய்து வெற்றி பெற்றிருக்கிறார்.
அஜீத் வரும் ஒவ்வொரு காட்சியிலும் கரகோசங்கள் (அடிக்கடி பில்லா நினைவு வருகிறது). படத்தின் இரு நாயகிகள் சமீரா மற்றும் பாவனா. இருவருக்குமே படத்தில் அதிகம் வேலை இல்லை(ஏன் அஜீத் தவிர யாருக்குமே). சமீரா அஜீத்தின் உதவியாளராக, பாவனா பிரபுவின் உதவியாளர். இருவரும் அஜீத்தை காதலிக்கிறார்கள்.
இறுதியில் ஏன் இருவரில் ஒரு நாயகியை தேர்ந்தெடுக்கிறார் என்பதற்கு எந்த ஒரு காட்சியும் விளக்கம் அளிக்கவில்லை. பிரபுவுக்கும் ஒன்றும் பெரிய கதா பாத்திரம் இல்லை. க்ளைமேக்ஸில் அவரை கட்டி வைத்து அடிக்கும் போது அவர் கதறுவது அனைவருக்கும் சிரிப்பையே வர வைத்தது.
பாடல் காட்சிகள் வெறுப்பைத் தருகின்றன. தேவையற்ற இடங்களில் அவற்றை செருகி சொதப்பியிருக்கிறார்கள். வில்லன்களுக்கு அதிக பில்டப் கொடுத்து கடைசியில் சப்பையாக்கி கொன்றிருக்கிறார்கள். சுரேஷ் வரும் காட்சிகள் கடுப்பேற்றுகின்றன(கடுப்பேத்துறார் மைலாட்). அவர் சட்டென திருந்துவதெல்லாம் ரொம்ப ஓவர்.
படத்தின் க்ளைமேக்ஸ் தமிழ்சினிமா உருவானது முதல் தொடர்ந்து பல படங்களில் இடம் பெற்றதுதான் (ஒன்னும் புதுசில்ல). முழுக்க முழுக்க அஜீத்தை மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள்.
இப்பொழுதும் தன் திறமைக்கேற்ற கதையை தேர்வு செய்வதில் நம்ம "தல" கோட்டை விட்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. தன் ரசிகர்களுக்காக மட்டுமல்லாமல் அனைத்து திரை ரசிகர்களுக்காகவும் ஒரு நல்ல கதையை அடுத்தப் படத்திலாவது தேர்ந்தெடுப்பார் என்ற நம்பிக்கையில்(வழக்கம் போல) காத்திருக்கும் ரசிகனாய் நாங்கள்.
அசல் -பழைய படங்களின் நகல்
1 comments:
so.., better luck next time ajith
Post a Comment